Saturday, September 15, 2007

ரமலான் சிந்தனைகள் - 1

ரமலான் சிந்தனைகள் - 1

முகமலர்ச்சியுடன் நோன்பு துவங்குவோம்

ரம்ஜான் மாதம் பிறந்து விட்டது. நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையை துவங்குகிறோம்.

நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிளவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம்.

இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும்.

தானத்துடன் நல்ல சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதோ சில சிந்தனைகள்.

  • குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும்.
  • உற்றார் உறவினர்களுடன் சச்சரவு வேண்டாம். அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும்.
  • பிறருடைய பாரத்தையும் நாம் சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும்.
  • அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
  • விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.
  • பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், "நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,' என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.
  • அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய நல்ல நினைவுகளுடனும், முகமலர்ச்சியுடனும் இன்று நோன்பைத் துவங்குவோம்.

இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!

No comments: