சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் கடலூர் மாவட்ட கடலோர மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம்
கடலூர் மாவட்டத்தில் 54 கிராமங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். கடற்கரைக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் பற்றி தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட நிர்வாகம் உஷார் படுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ உடனடியாக அதிகாரிகளை அழைத்து பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
எச்சரிக்கை மணி
கலெக்டர் அலுவலகம் அருகே அவசர கால சுனாமி எச்சரிக்கை மையம் உள்ளது. இங்கு சுனாமி எச்சரிக்கை மணி உள்ளது. இந்த மணி ஒலிக்கப்பட்டால் கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் உள்ள யூனியன் அலுவலகங்களில் உள்ள எச்சரிக்கை மணி நேரடியாக ஒலிக்கும்.
இந்த மையத்துக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நேரில் சென்று எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்தார். அதோடு அங்குள்ள ஒலி பெருக்கியில் பேசினார். இந்த பேச்சும் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள புயல் எச்சரிக்கை மையங்கள் மற்றும் யூனியன் அலுவலங்களில் நேரடியாக கேட்க முடியும்.
காலி செய்ய உத்தரவு
கடலோர பகுதிகளில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு மேடான பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் கலெக்டர் எச்சரிக்கை செய்தார்.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் கடலோர பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை வீடுகளை காலி செய்ய செய்து பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச்சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, கிள்ளை, தேவனாம்பட்டினம், பரங்கிபேட்டை, சிங்காரதோப்பு, சாமியார்பேட்டை உள்பட 54 கிராமங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு கிளம்பி சென்றனர்.
லாரிகளில் ஏறி தப்பினார்கள்
தேவனாம் பட்டினத்தில் சுனாமி வீடுகள் கட்டும்பணி நடந்து வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சுனாமி பற்றி செய்தி கிடைத்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கட்டிட காண்டிராக்டருக்கு சொந்தமான லாரிகளில் ஏறி அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வழக்கமாக இரவு 9 மணிவரை பொதுமக்கள் காற்று வாங்க உட்கார்ந்திருப்பார்கள். அவர்களுக்காக சுண்டல், பொரி, சிப்ஸ், ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தள்ளுவண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்.
சுமார் 6 மணி அளவில் போலீசார் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதும் இந்த கடைகாரர்கள் எல்லாம் கடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்றனர். பீச் பகுதிக்கு உள்ளே செல்ல போலீசார் தடை விதித்தால் சில்வர் பீச் பகுதி வெறிச்சோடி போய் கிடந்தது.
கடலூர் மாவட்டத்தில் கடற்கரையை யாரும் நெருங்காதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment