Monday, September 10, 2007

பரங்கிப்பேட்டை அருகே சாராயம் கடத்தல்

பரங்கிப்பேட்டை அருகே காரில் 500 லிட்டர் சாராயம் கடத்தல்

வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

பரங்கிப்பேட்டை,செப்.10-

பரங்கிப்பேட்டை அருகே காரில் 500 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சாராய வேட்டை

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் சரகத்தில் விஷ சாராயம் கடத்தப்படுவதாக சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வேலனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில் வேலன் மேற்பார்வையில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் புதுச்சத்திரம், பெரியப்பட்டு ஆகிய பகுதியில் தீவிர சாராய வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்ளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நேரத்தில் கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த காரை வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.

500 லிட்டர் சாராயம்

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை ஜீப்பில் விரட்டினர். அந்த கார் பரங்கிப்பேட்டை ரோட்டில் சென்றபோது போலீசார் வழிமறித்து பிடித்தனர். தற்குள் காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார். உடன் போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 500 லிட்டர் விஷ சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சாராயத்தையும், அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். விசாரணையில் தப்பி ஓடியவர் கருவேப்பம்பாடியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 30), என்று தெரிந்தது.

இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனை தேடி வருகின்றனர்.

No comments: