ரமலான் சிந்தனைகள் - 10
வரவுக்கேற்ற செலவு செய்வோம்
பக்கத்து வீடுகளில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ, அவையனைத்தும் எனக்கும் வேண்டும் என்று கணவரிடம் அடம் பிடிக்கும் பெண்கள் ஒரு சாரார் இருக்கிறார்கள். இவர்கள், பணிக்குச் சென்று விட்டுத் திரும்பும் கணவனை நிம்மதியாகவே இருக்க விடுவதில்லை.
நபிகள் நாயகத்துக்கே இப்படி ஒரு நிலைமை அவரது மனைவியர் மூலம் ஏற்பட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஒருமுறை, நாயகத்தின் மனைவியர் ஒன்று கூடி, "இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர்.
இருப்பதைத்தானே நாயகம் அவர்களுக்கு கொடுக்க முடியும்!
அவர் மனம் நொந்து போனார்.
மனைவியரிடம் அவர் பேசவில்லை.
வீட்டை விட்டு வெளியேறிய அவர், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்.
ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.
"நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்... உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன்.
மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம்.
அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம் என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது.
நாயகம் வீட்டுக்குச் சென்றார்.
தன் மனைவி ஆயிஷாவை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்.
அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர்.
எல்லோரும், தங்கள் செய்கைக்காக நாயகத்திடம் மன்னிப்பு கேட்டனர்.
அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என கேட்கும் பெண்கள், இறைவனின் இந்த எச்சரிக்கைக்கு அஞ்சி நடக்க வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.
இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!
No comments:
Post a Comment