ரமலான் சிந்தனைகள் - 14
கெட்ட பழக்கங்களை விடுவோமே!
இன்றைய உலகச் சூழலில் கெட்ட பழக்கங்களுக்கு இளைஞர்கள் மிக எளிதாக அடிபணிந்து விடுகிறார்கள்.
சிலர் நோன்பு காலத்தில் கூட இவ் வழக்கங்களை மேற்கொள்வதைப் பார்த்தால், மனம் படாதபாடு படுகிறது.
இந்த வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.
கெட்ட வழக்கங்கள் குறித்து குர்ஆன் வசனம் 2:195ல்,
"உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்,'' என்றும்,
வசனம் 4:29ல், "உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்,'' என்றும்
தற்கொலைக்குச் சமமாகச் சுட்டிக்காட்டுகின்றன.
மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு வாழும் நிஜமான முஸ்லிம் இத்தகைய கெட்ட வழக்கங்களை அனுமதிக்கமாட்டார்.
குறிப்பாக, கெட்ட வழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு என்கிறது குர்ஆன்.
வசனம் 6:141, "நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை,'' என்றும்,
வசனம் 17:26, "நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர்,'' என்றும் சொல்கிறது.
கெட்ட வழிக்கு செலவிடும் காசை நீங்கள் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ் மரணத்திற்குப் பின் உங்களை மூன்று கேள்விகள் கேட்பான்.
"பணத்தை எவ்வாறு சம்பாதித்தாய்?
எவ்வழியில் அதனைச் செலவு செய்தாய்?
உனது உடம்பை எதில் அழித்தாய்?''
என்பதே அந்த மூன்று கேள்விகள்.
இதற்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அப்போது, நமது தவறுகளெல்லாம் வெளிப்பட்டு, இறைவனின் முன்னிலையில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்.
எனவே, நோன்பு காலத்தில் கெட்ட வழக்கங்களை கைவிட உறுதியெடுங்கள்.
நோன்பு முடிந்த பிறகு மீண்டும் அதைப் பிடித்துக் கொள்ளாதீர்கள்.
உடலைக் கெடுக்கும் பழக்கங்களுக்கு ஆகும் செலவை, ஏழைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.
அது நம்மை அல்லாஹ்வின் அருகில் கொண்டு சேர்க்கும்.
இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!
No comments:
Post a Comment