Monday, September 17, 2007

ரமலான் சிந்தனைகள் - 4

ரமலான் சிந்தனைகள் - 4

ஒரு அருமையான மனப்பயிற்சி

'உடற்பயிற்சியைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன், அதென்ன மனப் பயிற்சி' என்று தானே கேட்கிறீர்கள்.

நாயகத்திடம் கேளுங்கள். அவர் பதிலளிப்பார்.

நீங்கள் நோன்பிருக்கும் காலங் களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், "நான் நோன்பாளி, நான் நோன்பாளி (பிரச்னைக்கு வரவேண்டாம்) என்று கூறிவிடுங்கள்,

சரி... ரம்ஜான் காலத்தில் நோன்பிருக்கும் சமயத்தில் மட்டும் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, ஷவ்வால் பிறந்ததும், மீண்டும் வம்புச் சண்டைகளுக்கு போய் விடலாமா என கேட்கக்கூடாது.

ரம்ஜான் நோன்பு என்றால் வெறும் பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமைய வேண்டும்.

அது மட்டுமல்ல!

(ரமலான் மாதத்தில் செய்யப்படும்) "ஒவ்வொரு நன்மைக்கும் பத்துமுதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்,'' என்கிறது இஸ்லாம்.

இப்படி எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை ரம்ஜான் மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது. உள்ளத்தூய்மையும், மனப்பக்குவமுமே இந்நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும்.

"நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக! அதிகமதிகம் நன்மை செய்வாயாக. பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள் செய்வதைக் குறைத்துக் கொள்,'' என்கிறார் நாயகம்.

ஆக, இன்றைய நமது சிந்தனை, பிறருக்கு நன்மை செய்வதை அடிப்படையாகக் கொண்டதாக அமையட்டும்.

இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!

No comments: