ரமலான் சிந்தனைகள் - 5
'உபதேசக்காரர்' பதவி
சிலரது பேச்சில் தேன் சொட்டும். 'எங்க ஊருக்கு வாங்க. நான் உங்களுக்கு வேணுங்கிற வசதியை செய்து தரேன்' என்பார்கள்.
ஊருக்குப் போனால், 'ஐயையோ! இன்றைக்கு முக்கியமான வேலை இருக்குதே. நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடுங்க' என்பார்கள்.
இன்னும் சிலர், 'என்னடா நீ! மனைவின்னா ஒழுங்கா குடித்தனம் நடத்த வேண்டாம். அவ கேட்டதை வாங்கிக் கொடு. குடிச்சிட்டு வீட்டுக்குப் போகாதே. புகை பிடிக்காதே. அது உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் ஏண்டா செய்றே' என தங்கள் நண்பர்களை எச்சரிப்பார்கள்.
ஆனால், உபதேசம் செய்தவனின் வீட்டில் போய் பார்த்தால், கதை வேறு மாதிரியாக இருக்கும். காரணமில்லாமல், மனைவியை உதைப்பது, குடிப்பது... இப்படி நேர்மாறாக நடப்பான்.
ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தப் பாவிகளுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என எச்சரிக்கிறார் நபிகள் நாயகம்.
'இப்படி அறிவுரை சொன்னவன் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு, அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தில் சுற்றுவான்.
இதைப் பார்த்து இவனிடம் அறிவுரை பெற்றவர்கள், "நீ நல்லவனாகத்தானே இருந்தாய். நல்லதைத் தானே எங்களுக்குப் போதித்தாய். பிறகு ஏன் உனக்கு இந்தக் கதி ஏற்பட்டது?'' எனக் கேட்பார்கள்.
அதற்கு அவன், 'நான் உங்களுக்கு நல்லதைத்தான் போதித்தேன். ஆனால், நல்லதின் அருகில் கூட நான் சென்றல்லை. தீமைகளை விட்டும் உங்களைத் தடுத்தேன். ஆனால், நான் தீமை புரிந்து கொண்டிருந்தேன்' என்று பதிலளிப்பான்' என்று நாயகம் சொல்கிறார்.
இன்றைய சிந்தனை இதுதான்.
ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. அதைக் கடைபிடித்தால்தான், ரமலான் நோன்பு நோற்றதின் பயனை அல்லாஹ்விடம் பெற முடியும்.
1 comment:
அல்லாஹ் நம்மனைவரையும் இந்த குணத்திலிருந்து காப்பாற்றுவதன் மூலம் இந்த இழிநிலையிலிரு்து காப்பானாக! கண்ணியமான முடிவை நம்மனைவருக்கும் வழங்குவானாக!
Post a Comment