ரமலான் சிந்தனைகள்- 6
குர்ஆன் ஓதுகிறீர்களா?
அண்ணல் நபிகள் நாயகம் இஸ்லாமை மக்கள் மத்தியில் பரப்பும் காலத்தில், அனுபவித்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
மெக்காவில் வசித்த, இஸ்லாம் எதிர்ப்பாளரான அபூஜஹல் என்பவன், "நாயகத்தின் தலையை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைபரிசாகத் தருவேன்,'' என அறிவித்தான்.
இதையடுத்து, உமர் என்ற இளைஞர் இந்தப் பொறுப்பை ஏற்றார்.
அப்போது நாயகம், அர்க்கம் மாளிகையில் இருந்தார்.
உமர் அவரைக் கொல்ல வாளுடன் செல்லும் வழியில், அப்துல்லாஹ் என்பவர் உமரைச் சந்தித்தார்.
"இளைஞனே! நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்கிறீர். ஆனால், உம் தங்கையும், அவரது கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உமக்கு தெரியுமா? உம் குடும்பத்தினரைத் திருத்திய பிறகல்லவா நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்ல வேண்டும்!'' என்றார்.
உமருக்கு அது நியாயமாகப்பட்டது.
அவரது கோபம் தங்கையை நோக்கித் திரும்பியது.
தங்கை வீட்டுக்குச் சென்றார்.
கதவு தாளிடப்பட்டிருந்தது.
உள்ளே குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டது.
அவர் கதவைத் தள்ளிக்கொண்டு வாளுடன் வீட்டுக்குள் பாய்ந்தார்.
தங்கை உம்மு ஜலீல் பாத்திமாவும், கணவர் ஸயீதுப்னு ஜைதும் அங்கிருந்தனர்.
மைத்துனர் மீது அவர் வாளுடன் பாயவே, கணவரைக் காப்பாற்ற பாத்திமா குறுக்கே பாய்ந்தார்.
அவரது முகத்தில் வாள் கீறி ரத்தம் கொப்பளித்தது.
இதைப் பார்த்ததும் உமரின் வெறி அடங்கியது.
அவளை இரக்கத்துடன் பார்த்தார்.
பாத்திமா மிகுந்த தைரியத்துடன்,"அண்ணா! நாங்கள் அண்ணல் நபிகளின் மார்க்கத்தை தழுவியுள்ளோம். ஆனால், உம் வாளுக்குப் பயந்து தடம் மாறமாட்டோம்,'' என்றார்.
தங்கையின் தைரியம் அவரது மனதை மாற்றி விட்டது.
"பாத்திமா! சற்றுமுன் நீர் ஓதியதை எனக்கும் சற்று காட்டுங்களேன்,'' என்றார்.
பாத்திமா தான் ஓதிய பகுதியைக் கொடுத்தார்.
அதைப் படித்ததும் அவர் கண்ணீர் வடித்தார்.
மனம் மாறினார்.
மறுநாள் நபிகளாரைச் சந்தித்து, இஸ்லாத்தில் இணைந்தார்.
குர்ஆன், கோபக்காரர்களையும் சாந்த சொரூபிகளாக்கும் வல்லமை கொண்டது.
ரமலான் காலத்தில் மிக அதிகமாக குர்ஆனை ஓத வேண்டும்.
No comments:
Post a Comment