ரமலான் சிந்தனைகள் - 9
சொல்வன்மை வேண்டும்
ஒரு விஷயத்தைச் சொல்லும் போது தெளிவாகவும், கருத்தாழம் மிக்கதாகவும், ஈர்க்கும் வகையிலும் சொல்ல வேண்டும்.
படித்தவர், பாமரர் ஆகிய இருதரப்பாருக்கும் அது புரிய வேண்டும்.
நாயகத்தின் வாழ்வில் நடந்த இந்த இனிய சம்பவமே இன்றைய ரம்ஜான் சிந்தனை.
இஸ்லாத்தை நபிகள் நாயகம் அரபுநாட்டில் பிரசாரம் செய்து வரும் வேளையில், ஏமன் மாகாணத்தை சேர்ந்த ஒரு கோத்திரத்தின் தலைவரான, அம்ரு அலி தவ்ஸி என்பவர், மெக்கா வந்தார்.
அவரிடம், நபிகளின் எதிர்ப்பாளர்களான குறைஷி இனத்தவர், நாயகத்தின் போதனைகளைப் பற்றியும், புதிய மார்க்கத்தைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததுமாக கூறி, நாயகத்தின் மீது வெறுப்பு ஏற்பட வைத்து விட்டனர்.
குறைஷி இனத்தலைவர் ஒருவர், "அம்ரு அவர்களே! தாங்கள், நாயகத்தின் போதனைகளைக் கேட்கவே கூடாது. அதற்கு உறுதி தாருங்கள்,'' என்றார்.
அம்ருவும், தன் காதில் பஞ்சை வைத்துக் கொள்வதாக உறுதி கூறி, கையில் சிறிது பஞ்சையும் வைத்துக் கொண்டார்.
பின்னர் அவர் கஃபாவுக்குச் சென்றார்.
அங்கே, நாயகம் தொழுது கொண்டிருந்தார்.
அவர் கூறிய இறை வசனங்கள் காற்றில் மிதந்து வந்தன. அவை அம்ருவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன.
நாயகம் கூறிய திருவசனங்களின் சொல்லழகு, நடையழகு, இனிய குரல், தெளிவான உச்சரிப்பு ஆகியவை அம்ருவை ஈர்த்தன.
அவர் கையில் இருந்த பஞ்சு தானாக கீழே விழுந்து விட்டது.
அவர் செயலற்று நின்றுவிட்டார்.
நாயகம் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பும் போது, அம்ரு நிற்பதைக் கவனிக்கவில்லை.
அவர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
அம்ரு அவரது இல்லத்துக்கே சென்று,
"பெருமானாரே! நான் உங்கள் அடிமை, உங்கள் சீடன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்றியருள வேண்டும்,'' என்றார்.
நபிகளார் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உபசரித்து, இஸ்லாத்தின் கருத்துக்களைப் போதித்தார்.
அம்ரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
சண்டை போட வேண்டும் என வந்தவரை, சமாதானமாகப் போகச் செய்த சொல்வன்மைக்குச் சொந்தக்காரர் நபிகள் நாயகம்.
இது தினமலர் நாளிதழில் வெளியாகும் சிந்தனைகளின் தொகுப்பே அன்றி வேறில்லை!
No comments:
Post a Comment