Thursday, September 27, 2007

பரங்கிப்பேட்டை அருகே பயங்கர தீ விபத்து - கலெக்டர் நிவாரணம்

பரங்கிப்பேட்டை அருகே பயங்கர தீ விபத்து

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு நிவாரணம்

பரங்கிப்பேட்டை அருகே சுனாமி தற்காலிக குடியிருப்புகள் எரிந்து பாதித்த 57 குடும்பங்களுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு நிவாரண உதவிகள் வழங்கினார்.

சுனாமியால் பாதித்த கரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு பாரதி நகரில் பாரதி தொண்டு நிறுவனம் சார்பில் 57 தற்காலிக குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

இந்த குடியிருப்புகள் நேற்று முன்தினம் மாலை தீப்பிடித்து எரிந்தன.

காற்று பலமாக வீசியதால் 57 வீடுகளும் தீப்பிடித்து சாம்பலாகின.

தீ விபத்தால் பாதித்தவர்களை சி. புதுப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைத்து உணவு வழங்கினார்.

தீ விபத்தில் பாதித்த மக்களுக்கு பு. முட்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வசந்தா, டாக்டர்கள் ஷகிலா பேகம், சுஜாதா ஆகியோர் சிகிச்சையளித்தனர்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னு தீ விபத்தில் பாதித்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி 57 குடும்பங்களுக்கு தலா ரூ 2 ஆயிரம், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணை, வேட்டி சேலை வழங்கினார்.

அவருடன் ஏ.எஸ்.பி., செந்தில் வேலன், ஆர்.டி.ஓ., குழந்தைவேலு, தாசில்தார் பட்டுசாமி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நடராஜன், துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சரவணன், சி. புதுப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி ஆகியோர் உடன் சென்றனர்.

No comments: