திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் நடவு செய்ய வேளாண் அதிகாரி வேண்டுகோள்
நெல் சம்பா பருவத்தில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்ப முறையில் நடவு செய்யுமாறு வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சிதம்பரம் வேளாண் உதவி இயக்குனர் அஜிஜூர் ரஹ்மான் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
சிதம்பரம் வேளாண் கோட்டத்தில் பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங்களில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல் சம்பா பருவத்தில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்ப முறையில் நடவு செய்ய வேண்டும்.
திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய வீரியமான தரமான இளம் நாற்றுகள் தயார் செய்ய வேண்டும்.
நெல் விதை 3 கிலோவில் இருந்து 5 கிலோ, பாலீதீன் பை 48 அடிக்கு 4 அடி, இரும்பு பிரேம் 4 அடி நீளம் 2 அடி அகலம் ஒரு அங்குலம் கனம் உள்ளது.
தொழு உரம் 20 கிலோ, வைக்கோல் ஒரு கட்டு. ஒரு ஏக்கருக்கு தேவையான 3 முதல் 5 கிலோ வரை விதையினை குடோமோனாஸ் 30 முதல் 40 கிராம் கலந்து நீரில் நன்கு 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு ஏக்கருக்கு நடவுக்கு நாற்று தயாரிக்க 48 அடி நீளம், 4 அடி அகல பாலீதின் சாக்கினை நல்ல மணல் தூவிய பரப்பில் சமமாக பரப்பி அதன் மீது தொழு உரம் கலந்த நன்கு கலக்கிய கட்டிகள் இல்லாத சேற்றினை 4 அடிக்கு 1 கன அங்குல கனம் உள்ள பிரேமில் பாகு அச்சு போல ஊற்ற வேண்டும்.
24 முறைகள் இவ்வாறு பிரேம் மூலம் சேற்றினை கலந்து அமைத்த பின் இரண்டாம் கொம்பு நெல் விதைகளை சீராக தூவி அதன் மீது நன்கு சலித்த உலர்ந்த தொழு உரத்தை தூவி ஒரு அங்குலம் அளவிற்கு கனமாக வைக்கோல் பரப்ப வேண்டும்.
தினமும் இந்த விதைப்பு செய்த மேற்பரப்பு வைக்கோல் மீது பூவாளி கொண்டு நீரை தெளிக்க வேண்டும்.
15 தினங்களில் வீரியமான நல்ல நாற்றுகள் நடவு செய்ய தயராகி விடும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment