தவறான மக்கள் தொகை கணக்கெடுப்பால் அரியகோஷ்டி ஊராட்சி மன்றம் ஸ்தம்பிப்பு
பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி ஊராட்சியில் குறைவான மக்கள் தொகை இருப்பதாக தவறான கணக்கெடுப்பு நடத்தியதால் அரசின் மானிய உதவி கூட போதுமான அளவு கிடைக்காமல் ஊராட்சியே முடங்கியுள்ளது.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சியில் 2ஆயிரத்து 882 பேர் உள்ளனர்.
ஆனால் ஊராட்சியில் கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை 613 பேர் என அதிகாரிகள் தவறுதலாக கணக்கெடுத்துள்ளனர். அப்போதே வாக்காளர் பட்டியலில் ஆயிரத்து 565 பேர் இருந்தனர்.
அதிகாரிகளின் தவறான கணக்கெடுப்பால் 2006ம் ஆண்டு மாநில நிதிக் குழு மானியம் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைக்காமல் ரூ.4 ஆயிரத்து 183 வழங்கப்படுகிறது.
இந்த தொகையில் மின்சார கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 137 பிடித்தம் போக ரூ. ஆயிரத்து 46 மட்டும் காசோலையாக கிடைக்கிறது.
இதில் ஊராட்சியில் பணிபுரியும் உதவியாளர் மாத ஊதியம் ரூ. ஆயிரத்து 163, மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர் ஊதியம் ரூ.600, கூடுதல் மோட்டார் ஒன்றுக்கு ரூ. 200, ஊராட்சி மன்ற தலைவர் நிரந்தர பயணப்படி ரூ.330, ஊராட்சியின் மாதாந்திர கூட்ட அமரும் படி ரூ.275 ஆக மொத்தம் ரூ.2 ஆயிரத்து 568 வழங்க வேண்டியுள்ளது.
ஊராட்சிக்கு வரவு ரூ. ஆயிரத்து 46 ஆகும். ஆனால் செலவு ரூ. 2 ஆயிரத்து 568 வரை ஆகிறது.
இதனால் தெரு விளக்குகள், குடிநீர் கைப்பம்புகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி போன்றவற்றிக்கு உதிரி பாகங்கள் வாங்க முடிவில்லை.
அதனால் அதிகாரிகள் மீண்டும் சரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து பதிவு செய்ய வேண்டும்.
ஊராட்சிக்கு போதுமான நிதி உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி ராஜேந்திரன் கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment