அண்ணா விளையாட்டரங்கில் யோகா பயிற்சி மையம் துவக்கம்
தமிழகத்தில் முதன்முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக அரசு சார்பில் இலவச யோகா பயிற்சி மையத்தை கடலூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஸ்டேட் யோகாசன அசோசியேஷன் ஆகியவை இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச யோகா பயிற்சி மையம் துவக்கி வருகிறது.
இதில் 17வது மாவட்டமாக கடலூரில் நேற்று இலவச யோகா பயிற்சி மையத்தை அண்ணா விளையாட்டு அரங்கில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு துவக்கி வைத்தார்.
இந்த யோகாசன பயிற்சி மையம் தமிழகத்தில் முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜெயந்தி தலைமை தாங்கினார். மாநில யோகாசன சங்க செயலாளர் பரமகுரு யோகி ராமலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீராசாமி, ஆர்.டி.ஓ., பிருந்தா தேவி, யோகாசன சங்க மாவட்ட தலைவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த இலவச யோகா பயிற்சி மையத்தில் தினமும் காலை 6 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4 முதல் 6.30 மணி வரையிலும் யோகா பயிற்சி அளிக்கப்படும்.
இதற்கென அரசு சார்பில் இரண்டு பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இலவச யோகா பயிற்சி பெற வயது வரம்பு இல்லை.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமென்றாலும் யோகா பயிற்சி பெறலாம்.
No comments:
Post a Comment