Wednesday, October 24, 2007

பரங்கிப்பேட்டை அருகே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பரங்கிப்பேட்டை அருகே சின்னகுமட்டி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்ன குமட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சின்னகுமட்டி சாலை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னகுமட்டி கிராமத்தில் இருந்து கடலூர் - சிதம்பரம் மெயின் ரோடு வரை உள்ள தார் சாலை சுமார் 1 கிலோ மீட்டர் மிகவும் மோசமாக உள்ளது.

இந்த சாலை போடப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது.

இதுவரை சாலை பராமரிக்கப்படவில்லை.

சாலையில் வெறும் ஜல்லிகள் மட்டும் கத்தி போல் உள்ளது.

இதனால் இந்த சாலை வழியாக சைக்கிளில் செல்லும் மாணவ - மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுடைய சைக்கிளில் ஜல்லிகள் குத்தி பஞ்சர் ஆகி விடுகிறது.

இதன் காரணமாக பள்ளிக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து சென்றாலும் சாலையில் உள்ள ஜல்லிகள் மாணவிகளின் காலில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்தி விடுகிறது.

தற்போது நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக மாறிவிட்டது.

சீரமைக்க வேண்டும்

சைக்கிளில் இரவு நேரத்தில் வருபவர்கள் கீழே விழுந்து தான் செல்ல வேண்டும். அந்த அளவுக்கு சாலைகள் பள்ளமாக உள்ளது.

மழைக் காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடி கனகராஜன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பல முறை மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை

ஆகவே, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி அப்பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments: